தமிழீழத்தை படைத்தளிப்போம்

Posted on Updated on

கடந்த ஆண்டு மே திங்களில் தமிழீழ விடுதலை போராட்டக் களத்தில் நான்காம் கட்ட இறுதி நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருந்தது. இறுதியாக தேசிய தலைவர் கொல்லப்பட்டுவிட்டதாக ஊடகங்கள் அறிவித்தன. இந்திய ஊடகங்கள் சிங்கள பேரினவாதத்தின் மூளையைக் கொண்டு தமது குரலில் பேசியது. தேசிய தலைவரின் அடையாளம் கொண்ட ஒரு உருவத்தை கருணா என்கின்ற இன துரோகியை வைத்து அடையாளம் காட்டினார்கள். பேய் அறைந்ததைப் போல் காணப்பட்ட கருணாவின் முகம் ஒரு சிறு சலனம் இல்லாமல் அந்த பொம்மையைப் பார்த்து உதடு அசைத்துவிட்டு சென்றது. ஒரு நாள் கழித்து இச்செய்தியை பேரினவாத ஆற்றல் ரத்தவெறி பிடித்த ராசபக்சே அறிவித்தான்.

இப்படி இனவிடுதலைக்கான மக்கள் விடுதலைக்கான மாவீரர்களை கொல்ல நினைப்பதும், கொல்லப்பட்டதாக அறிவிப்பதும் வரலாறுகளில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் எமது பதிவுகளின் மூலம் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை மட்டுமல்ல. சர்வதேச விடுதலைப்போராட்டத்தில் பங்காற்றிய மகத்தான தலைவர்களை அறிமுகப்படுத்துவதும், அத்தலைவர்களோடு எமது தேசிய தலைவரை ஒப்புமைப்படுத்துவதும் கடமை என கருதியது. மேலும் வாசிப்புத்தன்மை இல்லாமல் குமுதம் படித்து இலக்கியம் கற்பவர்களும், தினத்தந்தி படித்து அரசியல் கற்பவர்களும் இருக்கின்ற இந்த காலத்தில், சமூகம் அதைச் சார்ந்த அரசியல் அகப்புற தன்மைகள், தேசிய, சர்வதேசிய அரசியல் களங்கள், கடந்த கால வரலாற்று சூழல்கள் இவைகளை தெளிவுப்படுத்திக் கொள்ளாதவரை நாம் நமது தேசிய விடுதலையை வென்றெடுக்க முடியாது.

நமது தமிழ் தேசிய விடுதலை என்பது வரலாற்றின் நிகழ்வுகளோடும் நமது விடுதலையைக் குறித்த தேடல்களோடும் நமது தேவையை உள்ளடக்கியதாகவும் இருக்கின்ற காரணத்தினால் நாம் புறம் சார்ந்த அரசியல் தத்துவார்த்த கோட்பாட்டின்படிதான் நமது விடுதலையை இணைக்க வேண்டும். அந்த பாதைகளை நமது விடுதலைப் போராட்டத்தோடு இணைப்பதின் மூலமே நமது விடுதலையின் முழு பொருளையும் புரிந்து கொள்ள முடியும். நமது விடுதலை என்பது எவ்வளவு முக்கியமோ, அதைப்போன்றே சர்வதேச அரசியல் களங்களில் சமராடும் அடிமைத்தனத்தின் தளைகளை அறுத்தெறிய களமாடிக் கொண்டிருக்கும் எண்ணற்ற போராளிகளின் இலக்கும், அவர்களின் ஈகம் செறிந்த பயணமும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதோடு, அந்த போராட்ட தன்மையோடு நமது போராட்டத்தை கலந்து பார்ப்பதிலே தான் நமது வெற்றி உள்ளடங்கி இருக்கிறது.

கொன்றுவிட்டார்கள், கொன்றுவிட்டார்கள், லெனினை கொன்றுவிட்டார்கள் என்ற கூக்குரல் ஸ்தெப்பான் கில் காதில் விழுந்தபோது தடுமாறி விட்டார். அன்றைய நாளிதழை வாசித்துக் கொண்டிருந்த தோழர் லெனினின் மகிழ்வுந்து ஓட்டுநரான அவருக்கு இந்த ஓசை நம்ப முடியாததாக இருந்தது. அவர் தலை உயர்த்தி பார்த்தபோது, இளம் பெண் ஒருத்தி தோழர் லெனினுக்கு நேராக தமது துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருந்தாள். தாம் வாசித்துக் கொண்டிருந்த இதழை வீசி எறிந்துவிட்டு, அவளை நோக்கி ஓடுவதற்குள்ளாக அவள் மூன்று ரவுண்டுகள் லெனினை நோக்கி சுட்டிருந்தாள். பின், தமது துப்பாக்கியை அவரின் காலுக்கு அடியிலே வீசி எறிந்துவிட்டு ஓடினாள்.

அவளை பிடிக்க ஓடிய கில், தோழர் லெனின் அடிப்பட்டு கிடப்பதை நினைவு கூர்ந்து பின்நோக்கி திரும்ப வந்தார். அங்கே குழுமியிருந்த தொழிலாளர்கள் லெனினை தாங்கிப் பிடித்து காருக்கருகே கொண்டு வந்தார்கள். அந்த கார் உலக வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று ஆவணமான அலுக்குச் சட்டை போட்டவன் ஆள முடியுமா? என்கின்ற முதலாளித்துவ நையாண்டிக்கு முடிவுக் கட்டிய உலக வரலாற்றிலே தொழிலாளர்களின் ஆட்சி அதிகாரத்தை ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியமாக கட்டியமைத்த விலைமதிப்பற்ற ஒரு உயிரை சுமந்து கொண்டு அதைக் காப்பாற்றும் முகமாக பறந்தது. ரஷ்ய புரட்சியின் தலைவன் தோழர் லெனின் புரட்சி நடைபெற்று ஓராண்டு முடிவதற்குள்ளாக கொல்ல முயற்சி செய்த அந்த பெண்ணின் பெயர் ஃபான்னி கப்ளான் என்று தெரிய வந்தது.

சோசிலிட் ரெவல்யூசனரி என்னும் தீவிரவாத அமைப்பைச் சார்ந்த அவள், 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் நாளன்று அந்த விலைமதிப்பற்ற உயிரை கொல்வதற்கு முயற்சி செய்தாள். மகத்தான அக்டோபர் புரட்சியை தகர்க்க, எதிர் புரட்சியாளர்கள் தொடர்ந்த முயற்சிகளில் ஒன்றுதான் இது. லெனின் செய்த தவறென்ன? ரஷ்ய மக்களின் ரத்தத்தை அட்டையாக உறிஞ்சி அவர்களின் வாழ்வை சூறையாடிக் கொண்டிருந்த ஜார் என்னும் எதேச்சதிகாரியை அவனின் கொடுங்கோல் ஆட்சி அதிகாரத்தை அகற்றி ஒரு புதிய தொழிலாளி வர்க்கத்தினுடைய ஆட்சியை கொண்டு வந்தார். வேலை செய்பவர்களின் கடினங்களை அகற்றினார். 1917 அக்டோபரில் கடும் காற்றும் மழையும் கொண்ட ஒரு நாளில் லெனின் கிராடில் மோல்னி என்னும் கட்டிடத்தை தலைமையிடமாகக் கொண்டு புரட்சிக்கு தலைமைத் தாங்கினார்.

அதன்மூலம் உலகத்தின் வரலாறு தலைகீழ் மாற்றமடைந்தது. ரஷ்யாவின் வரலாற்றை மாற்றி அமைப்பேன் என்று தாம் ஏழாம் வயதில் உறுதி எடுத்த அவர், ஜாரின் எதார்த்த முகத்தை அந்த வயதிலேயே புரிந்து கொண்டிருந்தார். தமது அண்ணன் அலெக்ஸாண்டரை 1877 மே 8ஆம் நாள் ஜாரின் கொடுங்கோல் ஆட்சி தூக்கிலிட்டு கொன்றது. அவன் செய்த தவறு, நரோத்னிக்குகள் என்கின்ற பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து செயல்பட்டதுதான் அவனின் மரண தண்டனைக்கு காரணமாக அமைந்தது.

வரலாற்றின் பக்கங்கள் எப்போதும் துரோகங்களும், ரத்தக் கறை படிந்ததுமாகத்தான் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதன் மையம் எப்பொழுதும் அதிகார வர்க்கத்தின், அரச பயங்கரவாதத்தின் தலைமையில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதை தகர்த்தெறிவதின் மூலம்தான் விடுதலையை வென்றெடுக்க முடியும் என்பதை லெனின் போன்ற சிலர்தான் உணர்ந்திருக்கிறார்கள். அதே பாதையில்தான் எமது தேசிய தலைவரும் உணர்ந்தார். விடுதலையை எப்படி வென்றெடுக்க வேண்டும். வென்றெடுக்கப்பட்ட விடுதலையை எவ்வாறு மக்களுக்கானதாக மாற்ற வேண்டும் என்கின்ற மகத்தான சிந்தனை கொண்டவராக அவர் திகழ்ந்தார்.

அவரைக் கொல்ல பலமுறை முயற்சி நடந்தது. அது துப்பாக்கி குண்டுகளால் நடைபெற்ற முயற்சி மட்டுமல்ல. கருத்துக்களால் நடைபெற்ற முயற்சி. துப்பாக்கிக் குண்டுகளால் நடக்கும் முயற்சிகளைக் கூட மிக எளிதாக முறியடித்துவிட முடியும். தோழர் லெனின் காப்பாற்றப்பட்டது போல, காப்பாற்றப்பட்டு பின்னர் தமிழீழம் கட்டியமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சிங்கள பேரினவாத அரசு, இந்திய பார்ப்பனிய அரசோடு இணைந்து கொண்டு எமது தேசிய தலைவரை பரப்புரையால் கொன்றுகொண்டிருக்கிறது. இதுதான் கடந்த மே திங்களில் நடைபெற்றது. முன்னுக்குப் பின் முரணாக மாறி மாறி ஒரு தகவலை சொல்ல வேண்டிய பரிதாபகரமான நிலைக்கு சிங்கள அரசு தள்ளப்பட்டது.

ஒரு பொய்யை நிரூபிக்க அது மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டது. சிங்கள நாட்டின் பொய்யை நம்பிக் கொண்டிருக்க உலகத் தமிழர்கள் மட்டுமல்ல, விடுதலைக்கான போர்க்களத்தில் இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் தயாராக இல்லை என்பதையே நிகழ்வுகள் நிரூபித்திருக்கின்றன. சமீபத்தில் இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி மக்களுக்கு உணவு, நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற சர்வதேச தூதுக்குழுவைச் சேர்ந்தவர்களை சுட்டுக் கொன்றிருக்கிறது. உலகமே தலை கிறுகிறுத்து இது சரியா? இஸ்ரேல் ராணுவத்தின் அடங்காப்பிடாரித் தனத்தை ஒழிக்க வேண்டாமா? என்றெல்லாம் வெறும் கூக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நினைத்துப் பாருங்கள். கடும் சமரில் பாதிக்கப்பட்டிருந்த எமது உறவுகளுக்கு உலகெங்கும் வாழும் உறவுகளிடம் சேகரிக்கப்பட்ட உணவு, மருந்து, உடைகளை ஏற்றிக் கொண்டு வணங்கா மண் என்ற கப்பல் தமிழீழத்தை நோக்கிச் சென்றபோது, சிங்கள ராணுவம் இப்படித்தான் தமது அடங்காப்பிடாரித் தனத்தை காட்டியது. பல்வேறு அச்சுறுத்தலுக்குப் பிறகு, போராட்டங்களுக்குப் பிறகும்கூட அவை அந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை. இன்று செய்தி வருகிறது, அயர்லாந்து தூதுக் குழுவினர் பாலஸ்தீன மக்களுக்கு உணவேற்றி செல்வதற்கு கடல் வழியே வருகிறார்கள். ஒருவேளை அவர்கள் எமது கடல் எல்லைக்குள் கால் பதித்தார்கள் என்றால், நாங்கள் கடும் தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை செய்கிறது.

தமிழீழ மக்களுக்கு வழங்குவதற்காக, தமிழகத்திலிருந்து அய்யா பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையில் சேகரிக்கப்பட்ட உணவையும், மருந்தையும் இந்திய பாசிச அரசு தமிழ் விரோத கருணாநிதி அரசு தடை விதித்து, அது எம் மக்களுக்கு சென்றடையாமல் சிதைவடைந்து போனது. கோடிக்கணக்காக கொட்டிக் கொடுக்கப்பட்ட எம் உறவுகளின் உழைப்பு வீணடிக்கப்பட்டதற்கு இந்திய பார்ப்பனிய அரசும், அதன் காலடிகளில் வீழ்ந்து கிடக்கும் கருணாநிதி அரசும் காரணமாக இருந்தார்கள். உலகமெங்கும் இருந்து திரட்டப்பட்ட உணவு, மருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற வணங்கா மண் கப்பலை தடுத்தது சிங்கள பேரினவாத அரசும் அதன் கூட்டாளிகளின் அரசுமாகும்.

இப்போது காட்டு கத்தல் போடுகிறார்களே, இதே தான் இலங்கையிலே தமிழீழ மண்ணில் வசிக்கும் எமது மக்களுக்கு இழைக்கப்பட்டது. இந்த அக்கிரமத்தை தட்டிக் கேட்க அன்றே சர்வதேச சமூகம் முன்வந்திருக்குமேயானால் இன்று இஸ்ரேலுக்கு இவ்வளவு திமிர் வந்திருக்காது. ஆகவே, எங்கு தீமை நடக்கிறதோ, எங்கே அநியாயக்காரன் வசிக்கிறானோ, அங்கே அவனுக்கெதிராக நாம் கொதித்தெழும்போதுதான் ஒட்டுமொத்த உலகச் சமூகமும் மகிழ்ச்சியோடும் சமாதானத்தோடும் மனநிறைவுக் கொண்டு ஆனந்தமாய் வாழ முடியும். இது தமிழீழ மக்கள் தானே என்று அசட்டையாக இருந்த காரணத்தினால் இன்று வேறொரு அரசு பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இருக்கிறது. இந்த உலகம் மிக சுருங்கிவிட்டது. தகவல் தொழில்நுட்பத்தாலும், அறிவியல் காரணங்களாலும் வேகமாக கருத்துப் பாறிமாறிக் கொள்ளும் களம் இருப்பதால் மிக விரைவாக ஒரு நிகழ்வு அடுத்தவர் அறிந்து கொள்ள முடிகிறது.

அன்று எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சர்வதேச சமூகம் கண்டித்திருந்தால், இன்று இஸ்ரேலுக்கு இந்த திமிர் வந்திருக்க வாய்ப்பில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிப்பதை தடுத்தால், உலகமே எழுந்து நிற்கும் என்று அன்று சிங்கள பாசிச வெறியன் ராசபக்சேவுக்கு அவனை தோள்மீது வைத்துக் கொண்டு சமருக்கு அழைத்துச் சென்ற இந்திய பார்ப்பனிய அரசுக்கு இந்த உலகம் எச்சரிக்கை விடுவித்திருக்குமேயானால், இன்று இஸ்ரேலும் அமைதி காத்திருக்கும். ஆகவே, இனி வரும் காலங்களிலாவது நாம் எங்கு அநீதி நடந்தாலும் வரலாற்றின் பக்கங்களில் நமது எதிர்ப்பு பதிவு செய்யப்பட உறுதியாக பணியாற்ற வேண்டும்.

எமது தேசிய தலைவரின் மரணத்தைக் குறித்த செய்தியாகட்டும், பாலஸ்தீனத்திற்கு உணவுக் கொண்டு செல்லப்பட்ட தகவல்களாகட்டும், இது எமது தமிழீழ மண்ணில் நிகழ்ந்தது தான். ஆனால் இதையெல்லாம் கடந்துதான் தமிழீழம் வரலாறு படைக்க இருக்கிறது. இந்த பரப்புரைகளை எல்லாம் உடைத்தெறிந்துதான் நமது தேசம் உயிர்பெற இருக்கிறது. நாம் பதிவு செய்யும் தகவல்கள் நமது உயிரை பிழிந்து வடிக்கும் எழுத்துக்கள். இவற்றிற்கு உயிர் இருக்கிறது, இவை உலகெங்கும் விழிப்பூட்டும். அது நமது விடுதலையை வென்றெடுக்க பெரும் துணை புரியும்.

தேசிய தலைவரின் தலைமையில் தமிழீழ அரசு அமைவதை எந்த ஒரு ஆற்றலாலும் தடுக்க முடியாது. பரப்புரைகளை உடைத்தெறிவோம்.

கருத்துறைகளால் களம் படைப்போம்.

நாம் தமிழீழத்தை படைத்தளிப்போம்.
அதுவரை தொடர்ந்து இடைவிடாமல் தொடர் பயணம் செய்வோம்.

.

வெல்க தமிழீழம்.
வாழ்க தமிழீழ தேசிய தலைவர்.

 

உறைவிட்டு கிளம்பட்டும் போர் வாள்!!


-கண்மணி-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s