கதிர்க்கையன் ஈற்றெடுப்பு ! (பிரபாகரன் அந்தாதி)-01

Posted on Updated on


காவலாய் வாய்த்த கதிர்க்கையன் மாமறத்தை
ஆவலாற் பாட அகமுற்றேன் –தாவிலாச்
செந்தமிழே! தாள்பணிந்தேன் சின்னவனென் கற்பனையில்
சிந்தாமல் முத்தமிழைச் சேர்! (1)

சேர்ந்து தமிழரைச் சிக்கெனப் பற்றியவன்
நேர்த்தியினைப் பாட நிறைதமிழைச் -சேர்த்தென்னில்
தைத்த முருகடியான் தாளை வணங்கிடவும்
வைத்தேன் ஒருவெண்பா யாத்து! (2)

யாவர்க்கும் நல்லவா! ஈழத் தலைமகனே!
காவலாய் வாய்த்த கதிர்க்கையா! –ஆவலாய்
எந்தமிழ் மக்களை ஏற்றணைந்து காத்தவனே!
தந்தையே தாள்பணிந்தேன் தாழ்ந்து! (3)

தாழும் எமதினத்தைத் தாங்கித் தலைநிமிர்த்தி
வாழும் இனமாய் வகைசெய்தாய்! –பாழும்
அரியை விரட்டி அடித்த புலியே!
எரியை நிகர்த்தாய் எழுந்து! (4)

எழுந்த கதிர்க்கைய! ஈழத்தில் ஆடும்
உழுவக் கொடியிற்(கு) உரியோய்! –அழுந்த
விதைத்தாய் விடுதலை வேட்கையை; நாமும்
அதைத்தான் விரும்பினோம் ஆங்கு! (5)

ஆங்கே எமதினம் ஆளும் எனுங்கருத்தைத்
தாங்கி மறப்போர் தழுவினாய்! –ஈங்குன்
புகழைப் புகலப் பொருவில் தமிழை
அகழப் புகுந்தேன் அணைந்து! (6)

அணையா விளக்கே! அருந்தலைவ! உன்னைத்
துணையாக் குறித்துத் தொழுதோம் –இணையாய்
இருந்தீழ மக்களின் இன்னல் களையும்
மருந்தானாய்; சொல்வேனுன் மாண்பு! (7)

மாணார்* புரிந்த மதியில் செயலையெல்லாம்
காணார்போற் கண்டிருந்தார் காசினியில் –பேணார்*
திருவிற் செயலைத் திருப்பி அடித்தே
கருவிற் கலைத்தாய்க் களத்து! (8)

களத்துப் புகுந்த கதிர்க்கையா! எங்கள்
உளத்துள் ஆடும் உணர்வே! –இளைத்த
தமிழர்க்(கு) அரணாந் தருவே உனையிங்(கு)
உமையாள் கொடுத்தாள் உணர்ந்து! (9)

உணர்ந்துந்தை வேலு உவந்துலகிற் கீந்த
மணந்தங்கு வண்ண மலரே! –புணரிசார்
வல்வெட்டி* வார்த்தெடுத்த வான்மதியே! உன்புகழைப்
பல்மெட்டில் பாடேனோ பார்த்து! (10)

குறிப்பு:

தாவில்லா – குற்றமில்லாத

முருகடியான் – எனதாசான் சிங்கைப் பெருங்கவிஞர் பாத்தென்றல் முருகடியான்

அரி – சிங்கம்

உழுவக்கொடி – புலிக்கொடி; வேட்கை -பற்றுள்ளம்
பொருவில் – உவமையில்லாத

மாணார் – பகைவர்; பேணார் –பகைவர்

உமையாள் – பார்வதி (பிரபாகரனின் தாயார்ப்பெயர் பார்வதி)

புணரிசார் – கடல்சார்ந்த; வல்வெட்டி –வல்வெட்டித்துறை; வேலு –பிரபாகரனின் தந்தையார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s